

தொண்டி,
திருவாடானை தாலுகா மங்களக்குடியில் தாலுகா விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் கடம்பூர் துரைவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். அனைவரையும் நெய்வயல் முரளி வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகளில் விவசாய கடன்பெற்ற விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்சு தொகை வழங்கும் பட்டியலில் பெயர் இருந்தும் இழப்பீட்டு தொகையை வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வழங்காமல் உள்ளன. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியும் மிக குறைந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதை கண்டித்தும் முழுமையாக வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி மங்களக்குடியில் மிகப்பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் முழுமையாக கருகிப்போய் விட்டன. இதனால் திருவாடானை தாலுகா முழுவதும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. அதில் திருவாடானை தாலுகாவில் உள்ள மங்களக்குடி பிர்க்காவில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் முழுமையாக பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பட்டியலில் விடுபட்டு இருந்தது.
இதேபோல் இத்தாலுகாவில் சில பிர்க்காவை சேர்ந்த பல வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை மிகக்குறைவான அளவே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் கடந்த ஆண்டு பயிர் இன்சூரன்சு தொகை வழங்கும் பட்டியலில் விடுபட்டுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தற்போது ரூ.5,100 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயிர் காப்பீடு செய்தும் இழப்பீட்டு தொகை சுமார் 25 சதவீதம் மட்டுமே வழங்குவதாக கூறப்படுவது எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது. இப்பகுதி விவசாயிகள் தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே முழுமையாக பயிர் இழப்பீட்டு தொகை வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளோம்.
வருகிற 6-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.