டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கையாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம்; மாதவரம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கையாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்க செய்து மாதவரம் போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கையாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம்; மாதவரம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
Published on

சென்னை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களில் தமிழக அரசின் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், ஆங்காங்கே பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை மூலக்கடை மேம்பாலத்திற்கு கீழே, நேற்று காலை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க தயார் நிலையில் இருந்தனர். ஆனால், வேலைக்கு செல்லும் பரபரப்பான காலை நேரம் என்பதால், நிலவேம்பு கசாயம் குடிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

அந்த நேரத்தில், அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மாதவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அதை பார்த்ததும் டெங்கு காய்ச்சல் ஒழிப்புக்கு நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார்.

உடனே, தன்னுடன் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், செல்வராஜ் ஆகியோர் உதவியுடன் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருபவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்களும், போக்குவரத்து போலீசார் வழிமறிப்பதை பார்த்ததும், அய்யோ... மாட்டிக்கொண்டோமே... எவ்வளவு அபராதம் கொடுக்க வேண்டியது இருக்கும் என்று தெரியவில்லையே? என்று யோசித்தபடி நின்றனர். ஆனால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரோ, ஏன் ஹெல்மெட் போடவில்லை? என்று அதட்டியபடி கேட்ட அதே நேரத்தில், அங்க போங்க... நிலவேம்பு கசாயம் குடியுங்க... என்று நூதன தண்டனையை வழங்கினார்.

ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும், தப்பித்தோம்... பிழைத்தோம்... என்று நிலவேம்பு கசாயத்தை குடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நூதன விழிப்புணர்வு யுக்தியை நேரில் பார்த்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com