டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: வீடுகள், சுற்றுப்புறத்தை பொதுமக்கள் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்

குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. வீடுகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலர் டி.கே.ராமச்சந்திரன் பேசினார்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: வீடுகள், சுற்றுப்புறத்தை பொதுமக்கள் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்
Published on

நாகர்கோவில்,

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பாக, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் அரசு முதன்மை செயலரும், குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான டி.கே.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப துறையின் அரசு முதன்மை செயலர் டி.கே.ராமச்சந்திரன் பேசியதாவது:

குமரி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பட்டுள்ளது. வரும் மாதங்களில், டெங்கு காய்ச்சல் பாதிக்காதவாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் ஏற்படும்போது பொதுமக்கள் உடனடியாக டாக்டர்களை அணுகி, அவர்கள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தாமாக மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவை கண்காணிக்க வேண்டும். களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை, அவ்வப்போது சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக நாள் விடுப்பில் இருந்தால், அந்த விவரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், பொதுமக்கள் டெங்கு குறித்து தகவல் தெரிவிக்க ஏதுவாக, டெங்கு கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04652231077 மற்றும் இலவச தொலைபேசி எண்1800 425 0363 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கிள்ளியூர் அருகே திப்பிறமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், டெங்கு தடுப்பு பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், திப்பிறமலை அரசு தொடக்கப்பள்ளியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ராஹூல்நாத், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com