டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கிராம பஞ்சாயத்து உதவியாளர்களுக்கு நெல்லை கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உதவியாளர்களுக்கு கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தினார்.
டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கிராம பஞ்சாயத்து உதவியாளர்களுக்கு நெல்லை கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து உதவியாளர்களுக்கான நோய் தடுப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில், பருவமழையையொட்டி நோய் தடுப்பு தொடர்பான தூய்மை பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே கொசு ஒழிப்பு பணிகளில் வெற்றி பெற முடியும்.

கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சமுதாய வளாகங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மீது முதல்முறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். 2-ம் மற்றும் 3-ம் முறைகளில் ஆய்வு செய்யும்போது கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.500 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும்

கிராமப்புறங்களில் பெரும்பாலும் உபயோகப்படுத்த இயலாத டயர், பிளாஸ்டிக் கப் மற்றும் குடிநீர் கேன்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் பழுது ஏற்பட்டால், அதனை கண்டறிந்து 48 மணி நேரத்திற்குள் பழுது நீக்கம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

பொதுமக்களுக்கு சீரான முறையில் குளோரின் கலந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரில் குளோரின் அளவு சரியான அளவில் கலக்கப்படவில்லை எனில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சில நேரங்களில் வேலையை விட்டு அவர்கள் நீக்கப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) முத்துஇளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com