

ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதையொட்டி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் சுகாதாரமற்ற இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் ஆர்.டி.ஓ. சுரேஷ் தலைமையில் நகராட்சி ஆணையாளர் நாராயணன், சுகாதார அலுவலர் முரளிசங்கர், வருவாய் அலுவலர் பொதிகை நாதன், கிராம நிர்வாக அலுவலர் சாம்சன் உள்பட வருவாய், நகராட்சி ஊழியர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.
அப்போது ஊட்டி ராமகிருஷ்ணாபுரம், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி. மற்றும் சேரிங்கிராஸ் பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் சுகாதாரமாக உள்ளதா? என பார்வையிட்டனர். மேலும் வீடுகளில் உள்ள தொட்டிகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை நடத்தினர். பின்னர் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி இருந்த இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகள் அடிக்கப்பட்டது.
அதன்பின்னர் டேவிஸ்டேல் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சுற்றுப்புற சுகாதாரம் முறை யாக பராமரிக்கப்படாமலும், டெங்கு கொசுக்கள் உற்பத் திக்கு காரணமாக இருந்ததை அதிகாரிகள் கண்டனர். இதைத்தொடர்ந்து அந்த கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
தொடர்ந்து அதே பகுதியில் பேக்கரி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 3 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பிங்கர்போஸ்ட், காந்தல், லவ்டேல், பெர்ன்ஹில் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என வலியுறுத்தி 20 ஆயிரம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.