மந்திரி பதவிக்கு ஆசைப்படுவது தவறு இல்லை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

மந்திரி பதவிக்கு ஆசைப்படுவது தவறு இல்லை என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
மந்திரி பதவிக்கு ஆசைப்படுவது தவறு இல்லை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
Published on

பெங்களூரு,

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மெஜாரிட்டி கிடைக்கவில்லை

மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர். கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. அந்த ஆட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

அவர்களின் தியாகத்தால் எடியூரப்பா தலைமயில் பா.ஜனதா அரசு அமைந்தது. அதனால் மந்திரிசபை விரிவாக்கத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் அனைவருக்கும் மந்திரியாக வேண்டும் என்ற ஆசை வருவது சகஜம். மந்திரி ஆகவேண்டும் என்றும், அந்த பதவிக்கு ஆசைப்படுவதும் தவறு இல்லை. ஆனால் மந்திரிசபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. அதில் தற்போது 28 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 6 இடங்கள் உள்ளன.

அனைவருக்கும் வாய்ப்பு

யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பதை முதல்-மந்திரி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் பொறுமை வேண்டும். கட்சியில் யாருக்கும் அதிருப்தி ஏற்படவில்லை. மந்திரி பதவியை எதிர்பார்ப்பவர்கள், அந்த பதவி கிடைக்காதபோது, ஏமாற்றம் அடைவது சகஜம்தான். கட்சியில் எழும் அதிருப்தியை முதல்-மந்திரி எடியூரப்பா சரிசெய்வார்.

மந்திரிசபை விரிவாக்கம் மூலம் எங்கள் முன் இருந்த பெரிய சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். இனி நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவோம். புதிய மந்திரிகளும் தங்களின் பொறுப்ப உணர்ந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com