துணை போலீஸ் சூப்பிரண்டு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கின

மாமூல் வசூல் புகாரில் சிக்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கின
Published on

சேலம்,

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சேலம் குரங்குச்சாவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை போலீஸ் சூப்பிரண்டாக நாமக்கல்லை சேர்ந்த குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல் செய்வது, பழைய கஞ்சா வியாபாரிகளை கஞ்சா விற்பனை செய்ய தூண்டி அதன்மூலம் மாமூல் பெறுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக திருச்செங்கோட்டை சேர்ந்த கஞ்சா வியாபாரி ராணி என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தா மற்றும் குமாரின் உறவினரான சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தற்போது ஐதராபாத்தில் பயிற்சிக்கு சென்றுள்ளார். இன்ஸ்பெக்டர் சாந்தா, திருநெல்வேலியிலும், சிபிசக்கரவர்த்தி தஞ்சாவூர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பணியாற்றி வருகிறார்கள். கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல் செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், தனது மைத்துனர் பெயரில் வங்கி கணக்கை தொடங்கி அதன்மூலமாக வசூல் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, துணை போலீஸ் சூப்பிரண்டு குமாரின் வீடு கோவையில் உள்ளது. இதனால் அங்கு சென்று சோதனை நடத்த சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் சென்றனர். பின்னர் அவர்கள் கோவை கணபதி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த குமாரின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது, அவரது வங்கி கணக்கு விவரங்கள், சொத்துக்கான ஆவணங்கள், நில பத்திரங்கள் என கட்டுக்கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவற்றை போலீசார் எடுத்து சென்று அதன் மதிப்பு என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com