வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

வேலூர் மாவட்டத்தில் முழுஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள், பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
Published on

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் முழுஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள், பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2 வார ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு குறையாததால் நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் 57 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சாலைகளில் தேவையின்றி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் மிகவும் முக்கியம். அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பினர்.

சாலைகள் வெறிச்சோடின

வேலூர் நகரில் உள்ள பால், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

டீக்கடைகள், பேக்கரிகள் திறக்கப்படவில்லை. ஓட்டல்களில் பார்சல் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சாலையோரம், பஸ் நிலையங்களில் தங்கியிருந்த ஆதரவற்றோருக்கு சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனத்தினர் உணவு பொட்டலம், குடிநீர் பாட்டில் வழங்கினார்கள்.

வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. அதனால் ஆட்டோ, கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் இல்லாமல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பிற மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்ட எல்லை வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து அனுமதித்தனர்.

தமிழக-ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி, மாதனூர், பத்தலப்பள்ளி, கண்ணமங்கலம் கூட்ரோடு, பிள்ளையார்குப்பம் உள்பட மாநில, மாவட்ட 6 எல்லைகளில் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

முகூர்த்த தினம்

வேலூர் நகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஆரணி சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, கிரீன் சர்க்கிள், கலெக்டர் அலுவலக மேம்பாலம் பகுதி, மக்கான் சந்திப்பு, நேஷனல் சந்திப்பு, காமராஜர் சிலை சந்திப்பு, திருமலை-திருப்பதி தேவஸ்தான சந்திப்பு, மண்டித்தெரு மற்றும் கடைவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்றைய தினம் முகூர்த்த தினம் என்பதால் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் பலர் திருமண மண்டபங்களுக்கு சென்றனர்.

போலீசாரின் வாகன சோதனையின் போது திருமண பத்திரிகையை காண்பித்து பலர் சென்றதை காண முடிந்தது. முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com