வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. குடிக்க பணம் இல்லாமல் தவித்த மதுப்பிரியர்கள் ‘கட்டிங்'கிற்கு கைகோர்க்க ஆட்களை எதிர்பார்த்து டாஸ்மாக் முன்பு தவம் கிடந்தனர்.
வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
Published on

தேனி:

டாஸ்மாக் திறப்பு

தமிழகத்தில் கொரோனா எனும் கொடிய அரக்கன் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 2-வது அலையாக உருவெடுத்த இந்த வைரஸ் பலரின் உயிரை குடித்து வருகிறது.

கடந்த மாதம் இந்த வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்ததால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் கடைகளும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் மூடப்பட்டன. பின்னர் வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, நோய் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. ஒரு மாத பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுக்கடைகளுக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், தங்களின் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த பணத்தை எடுத்துக் கொண்டும், சிலர் கடன் வாங்கிக் கொண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது.

வெறிச்சோடிய கடைகள்

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு 2-வது நாளாக நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இல்லை. மாவட்டத்தில் 93 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தேனி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் குறைவான மதுப்பிரியர்களே மதுபானம் வாங்க வந்தனர்.

மதுகுடிக்க மனம் இருந்தாலும், அதை வாங்குவதற்கு கையில் பணம் இல்லாமல் மதுப்பிரியர்கள் தவித்தனர்.

சிலர், டாஸ்மாக் கடைகளின் முன்பு குறைவான பணத்தை வைத்துக் கொண்டு, அங்கு வருவோரிடம் ஆளுக்கு பாதி பணம் போட்டு வாங்கி, பிரித்துக் கொள்ளலாம் என கெஞ்சிக் கொண்டு இருந்தனர். இவ்வாறு 'கட்டிங்'கிற்கு கைகோர்க்க தவம் கிடந்த மதுப்பியர்களுடன், சக மதுப்பிரியர்கள் கைகோர்த்துக் கொண்டனர்.

அவர்கள் மதுபானம் வாங்கியதும் டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே அவற்றை சரிபாதியாக பிரித்து குடித்துவிட்டு பாட்டிலை தூக்கி வீசியபடி சென்றனர். இதனால், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் சுற்றுப்பகுதிகள் நேற்று திறந்தவெளி மதுபான பாராக மாறியிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com