பரபரப்பான தேர்தல் சூழ்நிலையிலும், கட்சி கொடி,சின்னங்களுக்கு இடம் அளிக்காத கிராமம் - 70 ஆண்டுகளாக கடைபிடிப்பு

விருதுநகர் அருகே மருதநத்தம் கிராமத்தில் கட்சி கொடி, சின்னங்களுக்கு இடம் அளிக்காமல் கடந்த 70 ஆண்டுகளாக கிராம மக்கள் அமைதியை கடைபிடித்து வருகின்றனர்.
பரபரப்பான தேர்தல் சூழ்நிலையிலும், கட்சி கொடி,சின்னங்களுக்கு இடம் அளிக்காத கிராமம் - 70 ஆண்டுகளாக கடைபிடிப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள மருதநத்தத்தில் 400 வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் பெறும்பாலானோர் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் 6 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இந்த கிராம பஞ்சாயத்துக்கான தலைவர் தேர்தலில் 4 பேர் போட்டியிடுகின்றனர். பஞ்சாயத்து வார்டுகளில் 2-வது வார்டு உறுப்பினராக செல்வி, 3-வது வார்டு உறுப்பினராக அழகுதாய், 5-வது வார்டு உறுப்பினராக ரமேஷ்குமார், 6-வது வார்டு உறுப்பினராக சமுத்திரகனி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்தபோது பிரச்சினை ஏற்பட்டு கிராம மக்கள் இடையே மோதல் உருவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கிராம மக்களும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர்.

இதன்படி கிராமத்தில் அரசியல் கட்சி கொடிகள், சின்னங்களால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மோதல் உருவாகும் நிலையை தவிர்க்க அவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கிராமத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியிலும் நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இருந்துகொள்ளலாம் என்றும் தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு வரும் அரசியல் கட்சியினர் 2 பேர் மட்டும் வேட்பாளருடன் அனுமதிப்பது என்றும் முடிவு எடுத்துள்ளனர்.

அந்த முடிவினை இன்று வரை கிராமமக்கள் கடைபிடித்து வருகின்றனர். கிராமத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு கூட தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். விழா முடிந்தவுடன் போஸ்டர்களை அகற்றிவிடவேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் கிராமத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்க கிராமத்தில் விளம்பர பேனர்கள் வைக்கவும் அனுமதிக்கப் படுவதில்லை. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைவர்கள் படங்களை அவர்கள் வீட்டுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளலாம். வீட்டிற்கு வெளியில் கட்சி தலைவர்களின் படங்களையோ, கட்சி போஸ்டர்களையோ ஒட்டுவதற்கும் அனுமதி இல்லை.

இந்த கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிடும் நிலையிலும் யூனியன் மற்றும் மாவட்ட உறுப்பினர் பதவி இடங்களுக்கான வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வந்தாலும் கிராம கட்டுப்பாடுகளை மீறுவதற்கு அனுமதிப்பதில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பான தேர்தல் சூழல் நிலவினாலும் இந்த கிராமத்தில் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியே நிலவுகிறது. மொத்தத்தில் இந்த கிராமமும், கிராம மக்களும் தற்போது உள்ள சூழ்நிலையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com