திருவலஞ்சுழியில் பழங்கால மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு

திருவலஞ்சுழியில் பழங்கால மண்பாண்டங்களின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
திருவலஞ்சுழியில் பழங்கால மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு
Published on

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின்போது பழங்கால மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை 7-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் பயன்பாட்டில் இருந்த மண்பாண்டங்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது தயாரிக்கப்படும் மண் பாண்டங்களை விட இந்த மண் பாண்ட பாகங்கள் மிகவும் கடினத்தன்மையுடன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் உடைந்த பாகங்களில் பல வகையான அலங்கார வடிவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் சுந்தரவேலு கூறியதாவது:-

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் 7-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவை பல்லவர், சோழர் காலத்தில் புழக்கத்தில் இருந்து உடைந்து போனவை. இவை அனைத்தும் தற்கால வடிவமைப்பில் இருந்து முற்றிலும் வேறுபாடானவை.

இவற்றை பார்க்கும்போது அந்த காலத்தில் கலயம், மடக்கு, கிண்ணி, சால், சட்டி, தொட்டி, கஞ்சி வடிதட்டு, கிணற்று உறை, கலய தாங்கி, கூரை ஓடு போன்ற விதவிதமான மண்பாண்டங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பாகங்களை தட்டினால் உலோகம்போல் சத்தம் கேட்கிறது. பாண்டங்களில் கழுத்து, தோள் பகுதிகளில் அலங்கார வடிவங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com