தஞ்சை அரண்மனை கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு அரவை கருங்கல் சக்கரம் கண்டெடுப்பு

தஞ்சை அரண்மனை கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு அரவை கருங்கல் சக்கரம் கண்டெடுக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தஞ்சை அரண்மனை கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு அரவை கருங்கல் சக்கரம் கண்டெடுப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்க விலாச அரண்மனை ஆகியவை சுண்ணாம்பு காரை கொண்டு பூசப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருங்கல் கட்டிடங்களுக்கு முன்பு செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இருந்துள்ளன. இந்த செங்கல் சுவர்களுக்கு சுண்ணாம்பு காரை பூசுவது நடைமுறையில் இருந்துள்ளது.

சுண்ணாம்புடன் மணல் கலந்து அதை கருங்கல் சக்கரத்தில் அரைத்து சில நாட்கள் புளிக்க வைத்து இந்த காரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சுண்ணாம்பு அரவை கருங்கல் சக்கரத்தை காளை பூட்டியும், சில இடங்களில் மனிதர்களை கொண்டும் வட்டமாக சுற்றி சுண்ணாம்பு காரை அரைக்கப்படும். இதில் சுண்ணாம்பு பசை தன்மையும், பிடிப்பு தன்மையும் அதிகம் கொண்டிருக்கும். அதனுடன் கடுக்காய் நீர், பதனீர், சர்க்கரை நீர், நெல்லிக்காய், முட்டையின் வெள்ளைக்கரு கலந்து தயாரிக்கப்பட்டால் அதன் பிடிப்பு தன்மை அதிகமாகும்.

கண்டெடுப்பு

தஞ்சை அரண்மனையில் சுண்ணாம்புக்காரை தயாரிக்க கருங்கல் சக்கரம் இருந்தது. இந்த சக்கரம் அரண்மனையின் வடக்குசுவர் அருகில் உள்ள ராணிவாய்க்கால் சந்தில் கழிவுநீர் செல்லும் சாக்கடை அருகே கேட்பாரற்று பல ஆண்டுகளாக இருந்தது. இதை தமிழக தொல்லியல்துறையினர் கண்டெடுத்து அந்த கருங்கல் சக்கரத்தை அரண்மனைக்கு எடுத்து வந்து தர்பார் மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த கருங்கல் சக்கரம் 500 கிலோ எடையும், 91 செ.மீட்டர் விட்டமும் கொண்டுள்ளது. கருங்கல் சக்கரத்தை ராஜஸ்தான் மாநிலம் துந்லோடு என்னும் இடத்தில் 1888-ம் ஆண்டு வரையப்பட்டுள்ள ஓவியத்தோடு ஒப்பிட்டு பார்த்தபோது இந்த கருங்கல் சக்கரம் சுண்ணாம்பு காரை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர். தர்பார்மஹாலில் வைக்கப்பட்டுள்ள கருங்கல் சக்கரத்தை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com