சட்டசபை தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட வாய்ப்பு தேவேகவுடா பேட்டி

அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று தேவே கவுடா கூறினார்.
சட்டசபை தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட வாய்ப்பு தேவேகவுடா பேட்டி
Published on

ஹாசன்,

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையையொட்டி மட்டுமே நடை திறக்கப்படும். ஆண்டுதோறும் 10 நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும், இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஹாசனாம்பா கோவிலுக்கு வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஹாசனாம்பா கோவிலில் முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, தனது மனைவி சன்னம்மா, மருமகள் பவானி ரேவண்ணா ஆகியோருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்ததும் வெளியே வந்த தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரஜ்வல் ரேவண்ணா

தென் இந்தியாவில் பிரசித்திப்பெற்ற இந்த ஹாசனாம்பா கோவிலில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்து மக்களின் நலனுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். குறிப்பாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் எனது மகன் குமாரசாமி பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து உள்ளேன்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2018) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட வாய்ப்பு உள்ளது. இதற்கு கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

ஆதரவு அளிக்க மாட்டோம்

சட்டசபை தேர்தலில் எங்களது கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்காவிட்டாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக குரல் கொடுப்போம். எங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்க மாட்டோம். நாங்கள் குறைவான இடங்களில் வெற்றி பெற்றாலும், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com