

சமயபுரம், மே.1-
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். அமாவாசையை யொட்டி நேற்று இக்கோவிலுக்கு அதிகாலையிலேயே சமயபுரம் வந்தனர். பக்தர்கள் தீபம் ஏற்றியும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து சென்றும், அக்னிச் சட்டி ஏந்தியும் வழிபாடு நடத்தினர்.
இதேபோல், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், காமாட்சி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிலிவனேஸ்வரர், வனத்தாயி அம்மன் கோவில் சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் சாமியை வணங்கினர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் பின் வாசல் அருகே ஒருவர் காரில் இருந்தபடியே அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார். அதைப் பெறுவதற்காக கோவிலுக்கு வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்து சென்று வாங்கினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தனிநபர்கள் அன்னதானம் வழங்கும் போது பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கும் வகையில் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் அன்னதானம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் தொட்டியத்தில் உள்ளமதுரைகாளியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வெள்ளி ரதத்தில் பக்தர்களுக்குகாட்சிஅளித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.