ராமேசுவரம் கோவிலில் தரிசனத்துக்கு தடையால் பக்தர்கள் ஏமாற்றம் - வழக்கமான பூஜைகள் நடக்கின்றன

ராமேசுவரம் கோவிலில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராமேசுவரம் கோவிலில் தரிசனத்துக்கு தடையால் பக்தர்கள் ஏமாற்றம் - வழக்கமான பூஜைகள் நடக்கின்றன
Published on

ராமேசுவரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அது போல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலிலும் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்யவும், 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாடவும் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமேசுவரம் சிருங்கேரிமட மேலாளர் மணிகெண்டிநாராயணன் கூறியதாவது, இந்தியாவில் இது வரையிலும் மலேரியா, டெங்கு, பறவைக்காய்ச்சல் என பல விதமான நோய்கள் உருவாகியுள்ளன. கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோயை பற்றி கேள்விபட்டது கூட கிடையாது. தற்போது தான் அதுபற்றியே தெரிகின்றது.

நாட்டில் பல நோய்கள் வந்துள்ள போதிலும் இது வரையிலும் எந்த நோய்க்கும் கோவிலுக்குள் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருந்தது கிடையாது. இதுவே முதல் முறையாகும். கோவில் உருவான காலத்தில் இருந்து இது போன்று நடைபெற்றது கிடையாது. வழக்கமாக சூரிய, சந்திர கிரகண நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் தான் கோவில் நடை அடைக்கப்படும். அப்போது பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் முதல் முறையாக கோவில் திறந்திருந்தும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்பது இதுவே முதல்முறை. கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையை பாராட்டுகின்றோம்.

பக்தர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும் கோவிலை திறந்து தினமும் சாமிக்கு நடத்தப்படும் வழக்கமான பூஜைகள் செய்வது, பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஒழிந்து எல்லா நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் முன்பு கடை வைத்துள்ள தேங்காய் பழ வியாபாரி சரவணன் கூறியதாவது, கொரோனா வைரஸ் வந்த தகவலில் இருந்தே கடந்த 1 வாரமாகவே ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்து வந்தது. தற்போது 31-ந்தேதி வரையிலும் பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும் மக்களின் உடல் நலத்திற்காகவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கை மகிழ்ச்சிதான். இந்த கொரோனாவால் ராமேசுவரம் கோவிலை சுற்றியுள்ள கடைகள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த வியாபாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது என்றார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து குடும்பத்துடன் ராமேசுவரம் வந்த முருகன் என்பவர் கூறியதாவது, ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி விட்டு சாமியை தரிசனம் செய்யவே குடும்பத்துடன் வந்தேன்.

ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது என்ற தகவல் தெரியாமல் வந்து விட்டோம். அதனால் அக்னி தீர்த்த கடலில் மட்டும் நீராடி விட்டு, வாசலில் நின்று சாமியை தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்கிறோம். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், மக்கள் கூட்டத்தை தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல கூடாது என்ற அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்யமுடியவில்லை என்ற வருத்தம் இல்லை. அடுத்த முறை வந்து பார்த்து கொள்ளலாம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com