மண்டைக்காடு கோவிலில் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி பக்தர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டைக்காடு கோவிலில் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி நடந்தது
Published on

மணவாளக்குறிச்சி,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தது.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த அக்டோபர் மாதம் முதல் சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது.

பக்தர்கள் போராட்டம்

அதன்படி குமரி மாவட்டத்திலும் ஏராளமான கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பக்தர்கள் வாங்கி வரும் பொருட்கள் அர்ச்சனை செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பக்தர்கள் அந்த பொருட்களை கோவில் வாசலில் வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் கோவில் வாசலில் பூஜை பொருட்கள் தினமும் குவிந்து வந்தது.

இந்த நிலையில் குருந்தன்கோடு ஒன்றிய இந்து கோவில்கள் கூட்டமைப்பு சார்பில், அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பகவதியம்மனிடம் அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. அப்போது கோவிலில் பூசாரிகள் இல்லை. இதனால் பூசாரிகள் வரும்வரை காத்திருந்து அர்ச்சனை செய்த பின்பே செல்வோம் என கூறி அவர்கள் கோவிலுக்குள் அமர்ந்து பஜனை பாடி உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுடன் பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதில் குமரி மாவட்ட இந்து கோவில்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதி, துணைத்தலைவர் வேல்தாஸ், ஒன்றிய தலைவர் வேலப்பன், துணைத்தலைவர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், ராஜ்குமார், கிருஷ்ணகுமார், மாவட்ட பிரார்த்தனை குழு தலைவி சுதா, துணைத்தலைவர்கள் லட்சுமி தேவி, சித்ரா கிருஷ்ணகுமார், பிரேமலதா மற்றும் சேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் பூசாரிகள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்துபவர்களுக்கு மட்டும் அர்ச்சனை செய்கிறோம் என தெரிவித்தனர். இதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. பக்தர்கள் கொண்டு வந்துள்ள பூஜை பொருட்களையும் அர்ச்சனைக்கு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பத்மநாபபுரம் தொகுதி தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் விரைந்து வந்து மனுவை பெற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

உழவாரப்பணி

அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நாளை (அதாவது இன்று) முதல் அர்ச்சனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக கோவில் கூட்டமைப்பினர் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com