அன்னவாசல், பொன்னமராவதி, புதுக்காட்டை பகுதிகளில் சத்ரு சம்ஹாரமூர்த்தி கோவில்களில் குருபூஜை

அன்னவாசல், பொன்னமராவதி, புதுக்கோட்டை பகுதிகளில் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில்களில் குருபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னவாசல், பொன்னமராவதி, புதுக்காட்டை பகுதிகளில் சத்ரு சம்ஹாரமூர்த்தி கோவில்களில் குருபூஜை
Published on

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள தான்றீஸ்வரம், வாதிரிப்பட்டி, காலாடிப்பட்டி சத்திரம் ஆகிய இடங்களில் சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமி கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில் அவர் அவதரித்த புரட்டாசி மாத பரணி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று தான்றீஸ்வரத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகளும் நவக்கிரக சாந்தி பூஜையும் நடந்தது. காலை முதல் குருபூஜை, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சத்ரு சம்ஹாரமூர்த்தி, சுப்பிரமணியர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில், மாவிளக்கு போட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து நாள் முழுவதும் தான்றீஸ்வர சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வாண வேடிக்கையுடன் சத்ரு சம்ஹார மூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு பஸ்கள்

விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் குருபூஜையில் கலந்துகொண்டனர். புதுக்கோட்டையிலிருந்து அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், கோவில் நிர்வாகிகளும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதியில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 81-வது ஆண்டு மஹாபரணி குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில் சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன், பொறியாளர் செல்வராஜ், நிலைய அலுவலர்கள் மற்றும் பொன்னமராவதி, காமராஜர் நகர் தொட்டியம்பட்டி, ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தீயணைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள சத்ரு சம்ஹார சுவாமி கோவிலில் குரு பூஜை நடைபெற்றது. குரு பூஜை விழாவையொட்டி கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சத்ரு சம்ஹார சுவாமி உருவப்படம் மற்றும் கருவறை முழுவதும் மின்விளக்கு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com