திருவையாறு காவிரி படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவையாறு காவிரி படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவையாறு காவிரி படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

திருவையாறு,

அமாவாசை நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் கடைப்பிடித்து வரும் முக்கிய பழக்கங்களில் ஒன்றாகும். மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்காதவர்கள் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

புண்ணிய தலமாக கருதப் படும் திருவையாறில் உள்ள காவிரி புஷ்யமண்டப படித்துறையில் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இதனால் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

நேற்று தை அமாவாசை என்பதால் திருவையாறில் உள்ள காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திரளான பக்தர்கள் திரண்டனர். நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் புரோகிதர்களிடம் காய் கனிகள், அரிசி, தேங்காய், நவதானியங்களை வழங்கி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். அமாவாசையையொட்டி புஷ்ய மண்டப படித்துறையில் ஐயாறப்பர் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது.

இதில் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் சிறப்பு அலங்காரத்தில் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து வீதி உலா நடந்தது.

முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியையொட்டி திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குலசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com