நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் மணலை அள்ளி போட்டு பக்தர்கள் வினோத வழிபாடு

நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மணலை அள்ளி போட்டு பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் மணலை அள்ளி போட்டு பக்தர்கள் வினோத வழிபாடு
Published on

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ளது மலைக்கோவில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இங்கு உருவ வழிபாடு கிடையாது. பெருமாள் நின்று அவதரித்ததாக கூறப்படும் படிக்கட்டுகளையே மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

கோவிலில் முன்பாக சேங்கை எனப்படும் தீர்த்தகுளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி கும்பிடுவதற்கு முன்பாக இந்த குளத்தில் தீர்த்தமாடி அந்த சேங்கை குளத்து மணலை கையினால் அள்ளி கோவில் அருகே உள்ள குளத்து கரையில் போடுவார்கள்.

மணல் மலை

இவ்வாறாக மூன்று தடவை செய்தால் நினைத்தது நிறைவேறும், மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்படி பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்ட மணல் தற்போது 50 அடி உயரத்துக்கும் மேலாக மணல் மலையாகவே மாறி விட்டது.

இந்த கோவிலின் வடக்கு பகுதியில் பெருமாள்மலை அடிவாரத்தில் கல்வெட்டுகளும், முற்கால மக்கள் வாழ்ந்த கற்பலகை வீடுகள் உள்பட பல்வேறு வரலாற்று தடயங்களும் உள்ளன. கார்த்திகை திருவிழாவின் போது சேங்கை குளத்தில் தண்ணீர் நிரம்பி தாமரை செடிகள் படர்ந்து கிடக்கும். இந்த தாமரை இலைகளை வீட்டுக்கு கொண்டு சென்று அந்த இலைகளில் உணவு சாப்பிட்டு விரதம் முடிப்பது பக்தர்களின் வழக்கம்.

ஜோதி தீபம்

மேலூர் பகுதியில் விவசாயிகள் பயிரிடும் தங்களுடைய கரும்புகளை இந்த விழாவில் பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு அதிக அளவு கரும்புகள் விற்பனை ஆனது. மேலும் வழக்கம் போல பெருமாள் மலை மீது கொண்டைக்கல் என்னுமிடத்தில் மாலை 5 மணி அளவில் ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.

அதன் பின்னரே பெருமாள் மலை சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் கார்த்திகை விளக்குகள் ஏற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com