தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன் பெறும் எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன் பெறும் எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன் பெறும் எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தென்பெண்ணை ஆற்றில் மழைக்காலங்களில் வரும் நீரை வலது மற்றும் இடது கரை பிரதான கால்வாயில் இருந்து புதிய கால்வாய்கள் வெட்டி வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்புவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்திற்காக நிலம் எடுப்பதற்காக ரூ.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் எடுக்கிற பணி நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக முதல் கட்டமாக ரூ.50 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குண்டான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கெர்ளகிறேன்.

எனவே இந்த திட்டம் நிறைவேறுகின்ற போது 3,400 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மக்களும், விவசாயிகளும் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகளுக்கு முதன்மையானது நீர். எனவே, நீர் மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டு வருவதுதான் அரசினுடைய முதன்மையான திட்டம். அதற்கு குடிமராமத்துத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அது முழுக்க, முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் எந்த டெண்டரும் கிடையாது. இத்திட்டத்துக்கு பொதுப்பணித் துறை மூலமாக சுமார் 1,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஊராட்சி ஒன்றிய ஏரிகளை பராமரிக்க சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஊரணிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அரசை பொறுத்தவரை, ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் பாதுகாத்து, நிலத்தடி நீரை உயரச் செய்து, வேளாண் பெருமக்களுக்கு தேவையான நீரையும், குடிப்பதற்குத் தேவையான நீரையும் உருவாக்கித் தருவதுதான் முதன்மையான திட்டம்.

கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் விளைகின்ற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அரசின் சார்பாக அனைத்து வசதிகளும் கொண்ட நவீன, மிகப்பெரிய காய்கறி, பழங்கள் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை வேண்டுமென்ற கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலை பதப்படுத்தி, சுமார் 30 நாட்களை வரை கெட்டுப்போகாத அளவிற்கு பாதுகாத்து, பயன்படுத்திக்கொள்ள புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

விவசாயிகளிடம் இருந்து அதிகமான பாலை பெற்று, அதனை ஆவின் நிறுவனம் மூலம் வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்த விவரங்களை விளம்பரங்கள் மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, விற்பனை செய்து, மற்ற நிறுவனங்களைக்காட்டிலும் ஆவின் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளில் காலங்களில், எந்த அரசும் செய்ய முடியாத அளவிற்கு நிறைய திட்டங்களை கொடுத்திருக்கிறோம். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை எங்களுடைய அரசு தொடர்ந்து செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் நெய் உற்பத்தியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து ஆவின் வளாகத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com