தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அரசு அலுவலர்கள்-போலீசார் தபால் வாக்குப்பதிவு அளிக்க சிறப்பு ஏற்பாடு

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அரசு அலுவலர்கள்- போலீசார் தபால் வாக்குப்பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அரசு அலுவலர்கள்-போலீசார் தபால் வாக்குப்பதிவு அளிக்க சிறப்பு ஏற்பாடு
Published on

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டமன்ற தேர்தலுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு அனைத்து தொகுதிகளிலும் 3-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்புகளில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்குப்பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்தந்த தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சிகள் நடைபெறும் இடத்திலேயே தபால் ஓட்டுக்கள் தொடர்பான படிவங்கள் வினியோகிக்கப்பட்டது. விருப்பமுள்ள போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் தபால் வாக்கினை பூர்த்தி செய்து உரிய இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பான தபால் வாக்கு செலுத்தும் பெட்டிகளில் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் அரசு அலுவலர்கள், 1,000 போலீசார் என மொத்தம் 9 ஆயிரம் அலுவலர்கள் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தர்மபுரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் தர்மபுரி உதவி கலெக்டரும், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன்அருள் கலந்து கொண்டு அரசு அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியினை பார்வையிட்டார். இந்த பயிற்சி முகாமில் தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், இளஞ்செழியன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு வித்யா மந்திர் பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் ஈடுபடும் 72 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுப்பதிவுக்கான படிவத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com