

ஒரத்தநாடு,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரி கடந்த 2006-ம் ஆண்டு ஒரத்தநாட்டில் தொடங்கப்பட்டது. இங்கு 3 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக அறிவித்தது.
இங்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட 10 நிரந்தர உதவி பேராசிரியர்கள், 100-க்கும் மேற்பட்ட தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்லூரியில் பி.பி.ஏ. பாடப்பிரிவில் பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு பதிலாக அண்ணாமலை பல்கலை கழகத்தில் பணியாற்றும் 3 விரிவுரையாளர்களை நியமனம் செய்து அரசு கல்லூரி கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
தர்ணா-மறியல்
இதையடுத்து ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கல்லூரிக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி தொடங்கப்பட்டதில் இருந்து பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பணியை பறிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கல்லூரிக்குள் அனுப்பி வைத்தனர். ஆனாலும் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தின் போது தற்காலிக விரிவுரையாளர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், தாசில்தார் அருள்ராஜ் ஆகியோர் அங்கு சென்று கவுரவ விரிவுரையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலை கைவிட்ட விரிவுரையாளர்கள், பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து இன்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தற்காலிக விரிவுரையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.