டீசல் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் திடீர் தீ பெரும் விபத்து தவிர்ப்பு

தர்மபுரி அருகே டீசல் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் தீப்பிடித்தது. இதனை பணியாளர்கள் உடனடியாக கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
டீசல் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் திடீர் தீ பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

தர்மபுரி,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஆந்திராவிற்கு டீசல், பெட்ரோல் ஆகிய எரிபொருட்களை நிரப்பிய 52 டேங்கர் பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று காலை தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது அந்த ரெயிலின் ஒரு பெட்டியின் சக்கரத்தில் இருந்து தீப்பொறிகள் பறந்து புகை ஏற்பட்டது. இதை ரெயில்வே பணியாளர்கள் சிலர் கவனித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி உடனடியாக மொரப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரெயில் நிலைய அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் இதுபற்றி அந்த சரக்கு ரெயிலின் டிரைவருக்கு தகவல் கொடுத்து, உடனடியாக அந்த ரெயிலை நிறுத்த உத்தரவிட்டனர். மொரப்பூர்-தொட்டம்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ரெயிலின் டிரைவர்கள் மற்றும் மொரப்பூர் ரெயில் நிலைய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரெயிலின் சக்கரத்தில் தீப்பொறிகள் பறந்து புகை கிளம்பிய பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த சரக்கு ரெயிலில் இணைக்கப்பட்ட 26-வது டேங்கர் பெட்டியின் ஒரு சக்கரத்தில் பேரிங் பாகத்தில் பழுது காரணமாக உராய்வு ஏற்பட்டது. அந்த சரக்கு ரெயில் வேகமாக ஓடியபோது அந்த பகுதியில் ஏற்பட்ட தொடர்ச்சியான உராய்வு காரணமாக சக்கரத்தில் தீப்பொறிகள் பறந்து இருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து ரெயில்வே பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து சரக்கு ரெயிலில் மொத்தம் இருந்த 52 டேங்கர் பெட்டிகளில் 26 பெட்டிகளை தனியாக பிரித்து தொட்டம்பட்டியில் உள்ள கூடுதல் ரெயில் பாதையில் நிறுத்தினார்கள். மீதமுள்ள 26 டேங்கர் பெட்டிகளை என்ஜின் மூலம் மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவற்றில் தீப்பொறி கிளம்பிய டேங்கர் பெட்டியை மட்டும் தனியாக பிரித்து மொரப்பூர் ரெயில் நிலையத்தின் ஒதுக்குபுறமாக உள்ள தண்டவாளத்தில் நிறுத்தினார்கள்.

அதன்பின்னர் மீதமுள்ள 25 டேங்கர் பெட்டிகள் மீண்டும் என்ஜின் மூலம் தொட்டம்பட்டி ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த 26 டேங்கர் பெட்டிகளுடன் அவற்றை ரெயில்வே பணியாளர்கள் இணைத்தனர். பின்னர் அந்த சரக்கு ரெயில் ஆந்திராவிற்கு புறப்பட்டு சென்றது. எரிபொருட்கள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலின் சக்கரத்தில் தீப்பொறி பறந்து நடுவழியில் நிறுத்தப்பட்டதால் கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் மற்றும் 2 சரக்கு ரெயில்கள் என 5 ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த ரெயில்கள் அனைத்தும் சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பின்னர் புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயிலின் சக்கரத்தில் தீப்பொறி வந்ததை ரெயில்வே பணியாளர்கள் உரிய நேரத்தில் கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com