அ.தி.மு.க. சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்

கிருஷ்ணகிரியில் வருகிற 17-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்திற்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.
அ.தி.மு.க. சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே, மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். விழாவை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தில் பந்தல்கள் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அசோக்குமார் எம்.பி., மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு கால்கோள் விழாவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.பெருமாள், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தென்னரசு, காத்தவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட மாட்டாது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியிருக்கிறார். ஒரு நல்ல பண்புள்ள தலைவர் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், வாக்கு வங்கிகளுக்கு அப்பாற்பட்டு அவர்களது சிந்தனை இருக்க வேண்டும். மாறாக ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு செயல்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. வருத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு தான்.

மு.க.ஸ்டாலின் சிறுபிள்ளைதனமான அரசியலை நடத்தி கொண்டிருக்கிறார். மக்களின் பிரச்சினைகளை பற்றி பேச சட்டமன்றம் இருக்கிறது. அவர் சட்டமன்றத்தில் மக்களுடைய பிரச்சினைகளை பற்றி பேசாமல், அவருடைய கட்சி அலுவலகத்தில் இதுபோன்ற கூத்துகளை செய்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு பண்பட்ட அரசியல் கட்சி தலைவரும் செய்யாத துக்ளக் தர்பாரை நடத்தி கொண்டிருக்கிறார்.

நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு சராசரி மனிதர். அரசு தன் கடமையை முழுமையாக செய்யும். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி நீர் வழங்குவதில் பிரதமர் மிகுந்த முயற்சி செய்தார். அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியிருக்கிறார். ஒரு தவறான செய்தியை மத்திய மந்திரி கூறக்கூடாது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி, நீதிமன்றத்திற்கு சென்று தான், ஒவ்வொரு நிகழ்விலும் வெற்றி பெற்று இருக்கிறார். எந்த கட்சியுடனும், மாநிலங்களுடனும் சேர்ந்து பேசி இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று, உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த தீர்ப்பை பெற்ற பின்பு காவிரி ஆணையம் அமைக்காமல் கர்நாடக தேர்தலுக்காக பிரதமர் தள்ளிப்போட்டார் என்று கூற வேண்டும். அப்படிப்பட்ட பிரதமர், அவர் செய்ததை போன்று சித்தரிப்பது கேலிக்குறியதாக உள்ளது என்று தான் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com