உள்ளாட்சி தேர்தலில் பொது சின்னம் பெற தினகரன் தனிக்கட்சி தொடங்குவார்

உள்ளாட்சி தேர்தலில் பொது சின்னம் பெற தினகரன் தனிக்கட்சி தொடங்குவார் என்று தங்கதமிழ்செல்வன் பேசினார்.
உள்ளாட்சி தேர்தலில் பொது சின்னம் பெற தினகரன் தனிக்கட்சி தொடங்குவார்
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.யும் மாவட்ட செயலாளருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கருத்தக்கண்ணன் வரவேற்றார். செயலாளர்கள் பெரியகருப்பன், ராஜாமணி, ராஜாக்கண்ணன், செல்வம், ராஜாராம், விஜயகுமார், அமாவாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. விளங்குகிறது. அதற்காக ஜெயலலிதா செய்த சாதனைகள் நாடே அறியும். அவர் இருந்த போதும், அதற்கு பின்பும் அ.தி.மு.க.வின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது பேசாமல் இருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனக்கு முதல்மைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும், ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் பதவிக்காக கொதிக்கிறார். சசிகலா குடும்பத்தினரை குற்றம் சாட்டுகிறார்.

கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் ஒரு செய்தியை தெரிவித்தார். அதில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வரும். அந்த எம்.எல்.ஏ க்களில் ஒருவர் முதல் அமைச்சராக வருவார் என்று கூறியுள்ளார். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லாது என்று நல்ல தீர்ப்பு வரும். தினகரன் விரைவில் முதல் அமைச்சர் ஆவார். அப்போது இப்போதைய முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்ளிட்ட 6 அமைச்சர்களுக்கு பதவி பறிபோகும்.

இன்று ஆட்சி, கட்சி, கொடி நம்மிடம் இல்லை. ஆனால் தொண்டர்களும், பொதுமக்களும் நம்மிடம் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு சின்னம் என்றால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படும். ஆகவே பொது சின்னம் பெறுவதற்கு துணை பொதுச் செயலாளர் நீதிமன்றத்தை நாடுவார். தேவைப்பட்டால் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதியிலும் அவர் வெற்றி பெறுவார். அதன் மூலம் ஆட்சி, கட்சி, கொடி, சின்னம் அனைத்தையும் பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.எல்.ஏவும், கழக அமைப்பு செயலாளருமான மேலூர் சாமி, பகுதி செயலாளர் ராமசுப்பு, பேரவை செயலாளர் கீழக்குயில்குடி தெய்வம், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், பாசறை மாவட்ட செயலாளர் ஆலங்குளம் செல்வம், சேடபட்டி ஒன்றிய செயலாளர் துரை.தனராஜ், மேலூர் ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுனர்கள் சங்க செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com