‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி, சிவகங்கை பூங்காவில்: நரிகள் பாதுகாப்பான கூண்டிற்கு இடம் மாற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சிவகங்கை பூங்காவில் சேதமடைந்த கூண்டில் இருந்த நரிகள் பாதுகாப்பான கூண்டிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டன.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி, சிவகங்கை பூங்காவில்: நரிகள் பாதுகாப்பான கூண்டிற்கு இடம் மாற்றம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பராமரிப்பின் கீழ் சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்கா தஞ்சை, அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் மற்றும் பிறபகுதிகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த பொழுதுபோக்கும் இடமாக இருக்கிறது. தஞ்சை பெரியகோவில் அருகே அமைந்திருக்கும் இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதுதவிர பூங்காவிற்குள் நீர் சறுக்கு, நீச்சல் குளத்தில் குளிக்க, மிதி படகுக்கு ஆகியவற்றிற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக புள்ளி மான்கள் பராமரிக்கப்படுகின்றன. இதேபோல, பூங்காவை சுற்றி இரும்புக்கூண்டுகளில் நரிகள், முயல்கள், புறாக்கள் வளர்க்கப்பட்டு அவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கஜா புயலினால் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்த மரங்கள் சில சாய்ந்து விழுந்தன. தற்போது விழுந்த மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மரம் விழுந்ததால் பூங்காவில் இருந்த நரிக்கூண்டு கூரை சேதமடைந்தது.

மேலும் சேதமடைந்த நரிக்கூண்டின் மேற்புறம் திறந்த நிலையிலும், அதன் மேற்கூரை இடிந்து கூண்டுக்குள்ளே சரிந்தும் உள்ளன. இதனால் சேதமடைந்த கூண்டில் இருந்து அதில் இருக்கும் 4 நரிகள் தப்பிச்செல்லும் அபாயம் இருப்பதாக சுற்றுலாப்பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் சேதமடைந்த கூண்டில் இருந்த 4 நரிகள் அருகில் உள்ள பாதுகாப்பான கூண்டிற்குள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.

முதலில் ஒரு நரியை பிடித்த போது மற்ற நரிகள் மண்ணில் அவைகள் ஏற்படுத்திய குகைக்குள் நுழைந்து மறைந்துகொண்டன. பின்னர் குகைக்குள் தண்ணீர் பீச்சிஅடித்து மற்ற நரிகளை பாதுகாப்பாக பிடித்து அருகில் உள்ள கூண்டில் தொழிலாளர்கள் அடைத்தனர். சேதமடைந்த கூண்டுகள் விரைவில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com