திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பரபரப்பு: பயணியை சரமாரி தாக்கிய டிரைவர்-கண்டக்டர்கள் - போலீஸ் விசாரணை

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணியை டிரைவர்-கண்டக்டர்கள் சரமாரி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பரபரப்பு: பயணியை சரமாரி தாக்கிய டிரைவர்-கண்டக்டர்கள் - போலீஸ் விசாரணை
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திண்டுக்கல்லில் இருந்து தேனி வழியாக குமுளிக்கு செல்லும் ஒரு அரசு பஸ் நின்றுகொண்டிருந்தது. பஸ் புறப்பட கூடுதல் கால அவகாசம் இருந்ததால் பயணிகள் யாரும் அந்த பஸ்சில் ஏறவில்லை. இந்த நிலையில் அந்த பஸ்சில் பயணி ஒருவர் ஏறி, பின்புற இருக்கையில் அமர்ந்தார்.

அப்போது கண்டக்டர் அந்த பஸ்சுக்குள் வந்தார். அவர், பஸ் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது. எனவே வேறு பஸ்சில் செல்லுங்கள் என்று அவரிடம் கூறியதாக தெரிகிறது. அப்போது கண்டக்டருடன் அந்த பயணி வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதைப்பார்த்த மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் என 5 பேர் அங்கு வந்து அந்த பயணியை பஸ்சை விட்டு கீழே இறக்கினர்.

பின்னர் அந்த பயணியிடம் வேறு பஸ்சில் செல்லும்படி கூறினர். ஆனால் அதனை ஏற்காத பயணி டிரைவர்கள், கண்டக்டர்களிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஒரு டிரைவர், அந்த பயணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதையடுத்து அந்த பயணியும் பதிலுக்கு டிரைவரை தாக்கினார். இதையடுத்து அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மற்ற டிரைவர்களும், கண்டக்டர்களும் சேர்ந்து அந்த பயணியை தாக்க தொடங்கினர். பட்டப்பகலில் பயணிகள் கூட்டத்துக்கு மத்தியில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அந்த பயணியை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கண்டக்டர், டிரைவர்களால் தாக்கப்பட்ட பயணி தேனியை சேர்ந்த விஜய் (வயது 35) என்பது தெரியவந்தது. அவருக்கும், டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மோதல் சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com