திண்டுக்கல் பிரசார கூட்டம்: சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

சிறுபான்மையின மக்களுக்கு எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று பேகம்பூர் பிரசார கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் பிரசார கூட்டம்: சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் பேகம்பூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொல்லையால் அல்லல்பட்ட மக்கள் தி.மு.க.வுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க விரும்புகின்றனர். இதற்காகவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தி.மு.க.வுக்கு நிரந்தரமாக ஓய்வு கிடைத்து விடும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி படுதோல்வி அடைவது உறுதி.

தேர்தல் பிரசாரத்தில் தனிநபரை அநாகரிகமாக பேசுவது முற்றிலும் தவறானது. அநாகரிகமாக பேசுவதில் தி.மு.க.வினருக்கு நிகர் யாரும் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் ஒரு மாயையை தி.மு.க. ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதாவது, தங்களை சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இதில் துளி அளவு கூட உண்மை கிடையாது. சிறுபான்மையின மக்கள் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்தி வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் விளங்குகிறது. அதனால் தான் அ.தி.மு.க.வில் சிறுபான்மையினர் ஏராளமானோருக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூட முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் செல்வதற்காக நிதி ஒதுக்கப்படும் என்பன உள்பட பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் நான் அமைச்சராக பொறுப்பேற்ற 5 ஆண்டு காலத்தில் 100 சதவீதம் வளர்ச்சி அமைந்துள்ளது. குறிப்பாக மக்களின் குடிநீர், சாலை, மின்விளக்கு என அடிப்படை வசதிகள் அனைத்தையும் முற்றிலுமாக நிறைவேற்றி உள்ளேன்.

குறிப்பாக ரூ.325 கோடியில் மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளேன். இது நம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. திண்டுக்கல்லில் யாரும் செய்ய முடியாத சாதனையை நான் செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பெருமைப்படுகின்றேன். ஆகவே மீண்டும் திண்டுக்கல்லில் வெற்றி பெற உங்கள் அனைவரையும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டுகிறேன். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.வின் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அன்வர்ராஜா பேசும்போது, முஸ்லிம்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. இருந்து வருகிறது. குடியுரிமை சட்டம் வந்தபோது ஒரு மோசமான நிலையை எதிர்க்கட்சிகள் உருவாக்க முயன்றது. அந்தச் சட்டத்தால் ஏதேனும் ஒரு முஸ்லிமாவது பாதிக்கப்பட்டர்களா, இல்லவே இல்லை. இந்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட முயன்றபோது 657 வழக்குகள் பதியப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் ராமநாதபுரம் வந்தபோது ஜமாத்தார்கள் வழக்குகளை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்தனர். உடனேயே அதை வாபஸ் பெற செய்தார். எனவே முஸ்லிம்களுக்கு ஆதரவாகவ இருக்கும் அ.தி.மு.க.விற்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நடிகர் ரவி மரியா பேசும்போது, தமிழகத்தில் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எல்லோரும் எடப்பாடி பழனிசாமி பற்றியும், அவரின் நல்லாட்சி பற்றியும் தான் பேசி வருகின்றனர். குறிப்பாக தற்போது அவர் அறிவித்துள்ள நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர்ந்துள்ளது. காரணம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முற்றிலும் நிறைவேற்றினார். அவர் மறைந்தாலும், அவர் வழியில் நின்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் ஒருசேர திறம்பட நடத்தி வருகிறார். குறிப்பாக அவர் விவசாயிகள், பெண்கள் என அனைவருக்குமான திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார். வரும் காலத்தில் பெண்களுக்காக பல அறிவிப்புகளையும் அறிவித்துள்ளார்.

அதன்படி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1500, இலவச வாஷிங்மெஷின், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் ஆகியவை மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. எவரை கேட்டாலும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிப்பை சொல்லுகின்றனர். காரணம் அது மக்களிடம் போய் எளிதில் சேர்ந்துள்ளது. அ.தி.மு.க. எப்போதுமே செய்வதைத்தான் சொல்லும். சொல்வதைதத்தான் செய்யும். இதை மக்களும் உணர்ந்துள்ளனர். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிக்க தயாராகி உள்ளனர். எனவே நீங்களும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை வெற்றிபெற செய்யுங்கள். என்றார்.

கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அன்வர்ராஜா, கழக அமைப்பு செயலாளர் மருதராஜ், திரைப்பட நடிகர் ரவி மரியா, கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜே.எம்.எஸ்.இக்பால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com