

திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது திண்டுக்கல் முத்தழகுபட்டி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தனர். அதில், முத்தழகுபட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். எங்கள் ஊரில் சாலைகள் சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் உள்பட அனைவரும் சிரமப்படுகிறோம். மேலும் மாதத்துக்கு இருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் உப்புநீரை, குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. அதேபோல் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் தொற்றுநோய்கள் பரவுகிறது. எனவே, முத்தழகுபட்டியில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் கொடுத்த மனுவில், விட்டல்நாயக்கன்பட்டிக்கு அருகேயுள்ள சில கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி, சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர். இதனால் வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருகின்றன. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு பொதுசெயலாளர் ரவிபாலன், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, பொதுச்செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் மண்வெட்டிகளுடன் வந்து 2 மனுக்களை கொடுத்தனர். அதில் ஒரு மனுவில், திண்டுக்கல் அரண்மனைகுளம் தொடர்பான வழக்கில், முஸ்லிம் அமைப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் குளத்துக்கு பட்டா வாங்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் அந்த குளத்தை மீட்டு, அதை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். இதற்காக மாநகராட்சி மேல்முறையீடு செய்ய வேண்டும் அல்லது இந்து மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு மனுவில், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் வேளாம்பட்டி, தோப்புபட்டி, கதிரையன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக நிலம் இல்லாத ஆதிதிராவிடர்கள் பலர் உள்ளனர். ஒரே வீட்டில் 3 குடும்பத்தினர் வசிக்கும் நிலை உள்ளது. இதனால் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமையிலான நிர்வாகிகள், ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் பெற்று வந்தனர். இந்தநிலையில் திடீரென குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. இதுபற்றி கேட்டால் கலெக்டரிடம் கடிதம் பெற்று வரும்படி அதிகாரி கூறுகிறார். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.