திண்டுக்கல், தேனி மாவட்டத்தில்: கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 43 பேர் கைது

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 43 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில்: கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 43 பேர் கைது
Published on

திண்டுக்கல்,

நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு நிர்ணயித்துள்ளதை விடுத்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க 13 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்தனர்.

முன்னதாக தீபாவளி அன்று காலையில், அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கோர்ட்டு உத்தரவை மீறியும் பட்டாசு வெடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். திண்டுக்கல் உட்கோட்டத்தில் 5 பேர், புறநகர் 9, பழனியில் 1, நிலக்கோட்டை 8, வேடசந்தூர் 2, ஒட்டன்சத்திரம் 9, கொடைக்கானல் உட்கோட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் தேனி மாவட்டத்திலும் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்களை போலீசார் கண்காணித்தனர். அப்போது, கோர்ட்டு உத்தரைவை மீறி பட்டாசு வெடித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தேவதானப்பட்டி பகுதியில் 3 பேர், போடியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் கள் அனைவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com