புதுவை கால்நடை துறை இயக்குனரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை

பாலியல் புகார்களில் சிக்கிய கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபனை பணியில் இருந்து நீக்கம் செய்யவும் அவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யவும் கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
புதுவை கால்நடை துறை இயக்குனரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை
Published on

புதுச்சேரி,

புதுவை கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் பத்மநாபன் மீது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதேபோல் மேலும் பலர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் புகார்கள் குழுவின் தலைவர் வித்யா ராம்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

இதையொட்டி இயக்குனர் பத்மநாபனிடம் விசாரிக்க உள்ளூர் புகார் குழு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத அவர் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு தடை பெற்றார். ஆனாலும் உள்ளூர் புகார்கள் குழு கால்நடை துறை இயக்குனரின் நடவடிக்கை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த குழு முன்பு ஆஜராகி 27 பெண்கள் சாட்சியம் அளித்தனர்.

இந்த விவகாரம் புதுவையில் உள்ள அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கால்நடை துறை இயக்குனர் பத்மநாபன் பெண் டாக்டருடன் பேசியதாக கூறப்படும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியதால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் பத்மநாபனுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அவரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. ஜனநாயக மாதர் சங்கத்தினர் கால்நடைதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடை துறை இயக்குனரை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதுபற்றிய விவரம் கவர்னர் கிரண்பெடியின் கவனத்துக்கு சென்றது. இதைத்தொடர்ந்து அவர் கால்நடை துறை இயக்குனர் பத்மநாபனை பணியில் இருந்து நீக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதுகுறித்து தலைமை செயலாளருக்கு கிரண்பெடி அனுப்பியுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:-

*பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக விசாரிக்கும் குழுவிடம் இருந்து கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் மீதான புகார் தொடர்பாக இடைக்கால அறிக்கை எனக்கு கிடைத்துள்ளது. அதன்மீது சில நடவடிக்கைகளை அவசரமாக எடுக்கவேண்டும்.

*பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பிற பெண் ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை மாவட்ட அளவிலான உள்ளூர் புகார்கள் குழு தனியாக விசாரிக்கவேண்டும். இயக்குனர் பத்மநாபன் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் பெறப்பட்ட தடையாணையை நீக்க சட்டத்துறை செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*பாதிக்கப்பட்ட பெண் கடந்த 18-ந்தேதி ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். அதன் மீது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

*இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் அறிந்து கால்நடைத்துறை இயக்குனராக உள்ள பத்மநாபன் இயக்குனர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். அவருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த அதிகாரியிடம் அந்த பொறுப்பினை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் கிரண்பெடியின் உத்தரவின்பேரில் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் பத்மநாபன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குனர் சுப்பாராவ் துறை பொறுப்புகளை கவனிப்பார். இதற்கான உத்தரவினை புதுவை அரசு சார்பு செயலர் காந்திராஜன் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com