கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய உதவும் செயலி பதிவிறக்கம் செய்ய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய உதவும் செயலியை அரசு ஊழியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய உதவும் செயலி பதிவிறக்கம் செய்ய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
Published on

கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காக, கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய உதவும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மத்திய அரசின் ஆரோக்யா சேது என்ற செயலியையும், மாநில அரசின் கோவிட்-19 என்ற செயலியையும் அரசு ஊழியர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் உடனடியாக செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் இந்த மாத இறுதிக்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்வதின் பயன் மற்றும் நோக்கம் குறித்து கோவை மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது-

மத்திய அரசின் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்யும் போது நம்மை பற்றிய பல்வேறு தகவல்கள் கேட்கப்படும். அவற்றை அனைத்தையும் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் செல்போனில் வைபை ஆன் செய்ய வேண்டும். அதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடம் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நம் அருகில் வந்தால் நமக்கு செல்போனில் தகவல் வரும்.

கோவிட்-19 செயலி

இதன் மூலம் நாம் வெளியே செல்லும்போது கொரோனா தொற்று உள்ளவர்கள் பகுதிக்கு செல்கிறோமோ என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த பகுதிக்கு செல்லாமல் முன்எச்சரிக்கையாக இருக்கவும் இந்த செயலி உதவியாக இருக்கும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் போது நம்முடைய உடல்நிலை பற்றிய தகவல்களும் கேட்கப்படும். அந்த தகவல்களை நாம் சரியாக பதிவிட வேண்டும். கொரோனா பாதித்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களும் இந்த செயலிகளை கட்டாயம் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்களும் உத்தரவிட்டுள்ளனர்.

கோவிட்-19 என்ற மாநில அரசின் செயலியை பதிவிறக்கம் செய்தால் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள் நமக்கு பதிவிறக்கம் ஆகிக் கொண்டேயிருக்கும். இந்த செயலிகளை இப்போது அனைவரும் பதிவிறக்கம் செய்து வருவதால் அதன் பயன்பாடு இன்னும் முழுமையாக தெரியவில்லை. இந்த செயலியை அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த செயலியை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com