

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக சரணவன் என்பவர் புதிதாக பொறுப்பேற்று உள்ளார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும், சில மாற்றுத்திறனாளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் வைத்துள்ளதை முறைப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 61 ஆயிரத்து 173 பேர் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் அதிகம் கொண்ட மாவட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சென்னை உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மன வளர்ச்சி குன்றிய, மூளை வளர்ச்சி குன்றிய, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைப்பாடுகள் கொண்டவர்கள் மற்றும் உடலில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.1,500 உதவித்தொகையும், 40 முதல் 60 சதவீதம் வரை பாதிக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
40 சதவீதத்திற்கு மேல் ஊனம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும் போது அவர்களுக்கு 1 அல்லது 2 வருடத்தில் பாதிப்புகள் மாத்திரை, மருந்து மூலம் சரி செய்யப்படும் என்று சிலருக்கு டாக்டர்கள் மருத்துவ அறிக்கை வழங்கி வருகின்றனர். டாக்டர்கள் கொடுத்த மருத்துவ அறிக்கையின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
டாக்டர்கள் கொடுத்த வருடங்கள் முடிந்த பிறகு மீண்டும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கின்றனர். அப்போது அவர்கள் பழைய அட்டையை திருப்பி கொடுப்பது இல்லை. இதனால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் தடைப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் காணப்படுகிறது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக ரேஷன் கார்டு நகல் இணைக்க வேண்டும் என்றும், புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் பழைய அடையாள அட்டையை அலுவலகத்தில் திருப்பி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டையாள அட்டை வழங்குவது ஒழுங்குப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.