சாமிதோப்பு தலைமைப்பதியில் பிரசாதம் வழங்காததால் அதிகாரிகளுக்கும், பதி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் பிரசாதம் வழங்காதது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், பதி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சாமிதோப்பு தலைமைப்பதியில் பிரசாதம் வழங்காததால் அதிகாரிகளுக்கும், பதி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம்
Published on

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் தலைமைப்பதியில் வரவு, செலவு கணக்குகளை நிர்வகிக்க குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த 21-ந் தேதி முதல் அறநிலையத்துறையினர் தலைமைப்பதிக்கு சென்று, கணக்குகளை நிர்வகித்து வருகிறார்கள்.

சாமிதோப்பு தலைமைப்பதியில் தினமும் மதியம் 1 மணிக்கு அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து உச்சிப்படிப்பும் அதன் பின்னர் பக்தர்களுக்கு இனிமமாக (பிரசாதம்) சந்தனபால், பழம், பாக்கு, வெற்றிலை, இனிப்புகள் வழங்குவது வழக்கம். இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தலைமைப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. வழக்கம்போல் மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பு நடந்தது. அதன்பின்பு பக்தர்களுக்கு வழங்கப்படும் இனிமம் பொருட்கள் வழங்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசம் அடைந்த பக்தர்கள் தலைமைப்பதி நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.

தலைமைப்பதி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் சென்று, பதியின் ஆகம விதிப்படி பக்தர்களுக்கு இனிமம் வழங்க வேண்டும். அதை நீங்கள் ஏன் வழங்க வில்லை என்று கேட்டுள்ளனர். இதனால், அதிகாரிகளுக்கும், பதி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், நிர்வாகிகள் ஆகம விதிப்படி பதியில் நடைபெறும் வழிபாடுகளையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும். அதில் எந்தவித குறைபாடும் இருக்க கூடாது என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதிகாரிகளும் அதனை ஏற்றுக்கொண்டனர். இ்ந்த சம்பவத்தால் தலைமைப்பதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com