திருமணம் செய்வதாக கூறிய நாளில் தலைமறைவு; காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா; நித்திரவிளை அருகே பரபரப்பு

நித்திரவிளை அருகே திருமணம் செய்வதாக கூறிய நாளில் தலைமறைவானதால் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
காதலனுடன் சேர்த்து வைக்க கோரி காதலன் வீட்டு முன்பு தர்ணா இருந்த இளம்பெண்.
காதலனுடன் சேர்த்து வைக்க கோரி காதலன் வீட்டு முன்பு தர்ணா இருந்த இளம்பெண்.
Published on

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

காதல்

நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்த ரகுகுமார் மகள் ரேஷ்மா (வயது 20). இவர் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் வாவறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 29 வயதுடைய வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் திடீரென ரேஷ்மாவை புறக்கணிக்க தொடங்கினார்.

இதுகுறித்து ரேஷ்மா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வாலிபர் 6 மாதங்கள் கடந்து ரேஷ்மாவை திருமணம் செய்து கொடுப்பதாக போலீசாரிடம் எழுதி கொடுத்தார்.

தலைமறைவு

வாலிபர் எழுதி கொடுத்தப்படி நேற்று திருமணம் செய்வதாக இருந்தது. எனவே நேற்று ரேஷ்மா தனது குடும்பத்தினருடன் கச்சேரி நடையில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு சென்று வாலிபருக்காக காத்திருந்தார். காலை 9 மணி முதல் 11.30 மணி வரை காத்திருந்தும் வாலிபர் வரவில்லை. இதற்கிடையே அந்த வாலிபர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த ரேஷ்மா குடும்பத்தினருடன் வாலிபரின் வீட்டுக்கு விரைந்தார். அங்கு காதலனுடன் சேர்த்து வைக்க கோரி வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரேஷ்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், நேற்று மாலை 6 மணி வரை போராட்டம் நீடித்தது.

இதை தொடர்ந்து போலீசார் 2-வது கட்டமாக ரேஷ்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com