தலைமறைவான ரிக் அதிபர், டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

திருச்செங்கோட்டில் தொழில் அதிபரை மிரட்டி ரூ.25 லட்சம் பறிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான ரிக் அதிபர் மற்றும் டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தலைமறைவான ரிக் அதிபர், டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
Published on

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சேலம் மெயின் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி அருகே வசித்து வருபவர் செங்கோட்டுவேல் (வயது 51). தொழில் அதிபர். இவருக்கு ரதீஸ், பிரசாத் என 2 மகன்கள். இருவருமே டாக்டர்கள். இதில் 2-வது மகன் பிரசாத் சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து மனைவி, மூத்த மகனுடன் செங்கோட்டுவேல் வசித்து வருகிறார்.

சில நாட்களாக செங்கோட்டுவேலுவின் செல்போனில் பேசிவந்த மர்ம நபர் ஒருவர், நாங்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள், உங்கள் மூத்த மகனை கொலை செய்யுமாறு எங்களிடம் ஒருவர் கூறி உள்ளார். உங்கள் மகனை கொலை செய்யாமல் இருக்க ரூ.25 லட்சம் தரவேண்டும் என மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து செங்கோட்டுவேல் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அறிவுறுத்தியபடி முதலில் முன்பணம் ரூ.3 லட்சம் தருகிறேன் என்று மர்ம ஆசாமியிடம் கூறிய செங்கோட்டுவேல், அந்த ஆசாமி கூறியபடி காரில் திருச்செங்கோடு கிரிவல பாதையில் மலார்குட்டை கரையில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று கோவில் வாசலில் டம்மி பணக்கட்டுகளை போட்டுவிட்டு சென்றார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் அங்கு வந்தனர். அங்கு அவர்கள் பணப்பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கிரிவல பாதையில் சென்றபோது, அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கினர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிக்கினர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பிவிட்டனர்.

இதையடுத்து பிடிபட்டவர்களிடம் இருந்த டம்மி பணத்தை கைப்பற்றிய போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த குமார் (வயது 36), சுரேஷ்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான 2 பேரும் அளித்த பரபரப்பான வாக்குமூலம் விவரம் வருமாறு:-

திருச்செங்கோட்டை சேர்ந்த சங்கர் என்பவர் தொழில் அதிபர் செங்கோட்டுவேலுவின் ரிக் வண்டியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது சென்னையில் படித்து வந்த செங்கோட்டுவேலுவின் மகன்களை காரில் கூட்டிச்சென்று சென்னையில் விட்டு விட்டு வருவாராம். அப்போது அவருடைய குடும்பத்தாரிடம் நல்ல பழக்கம் ஏற்பட்டு, அவர்களுடைய பணப்புழக்கத்தையும், குடும்ப நிலவரத்தையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பின்னர் சங்கர் வேலையில் இருந்து நின்று விட்டார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டுவேலுவின் 2-வது மகன் கார் விபத்தில் இறந்து விட்டதை அறிந்த சங்கர், செங்கோட்டு வேலுவுக்கு இப்போது ஒரே மகன்தான். அதனால் மகன் மீது செங்கோட்டுவேல் மிகுந்த பாசமாக இருப்பார். இதனால் அவருடைய மூத்த மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டினால் செங்கோட்டுவேலுவிடம் இருந்து எளிதாக பணம் கறந்து விடலாம் என நினைத்து அதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார்.

இதற்காக ரிக் அதிபரான மண்டகபாளையத்தை சேர்ந்த சதீஷ் என்பவரையும் உடன் சேர்த்துக்கொண்டு திட்டம் தீட்டி செங்கோட்டுவேலுவை செல்போனில் மிரட்டி உள்ளார். அப்போது பணம் தருவதற்கு செங்கோட்டுவேல் ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் சங்கர் தனது நண்பர்கள் விசைத்தறி தொழிலாளர்களான குமார், சுரேஷ்குமார் ஆகியோரை அழைத்து அந்த பணத்தை எடுக்க உதவினால் உங்களுக்கு ரூ.1 லட்சம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்களது திட்டப்படி, பணப்பையை செங்கோட்டுவேல் குறிப்பிட்ட இடத்தில் போட்டதும், ஏற்கனவே அங்கு காத்திருந்த சங்கர் மற்றும் கூட்டாளிகள் டம்மி பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது குமார், சுரேஷ்குமார் இருவரும் போலீசில் சிக்கிக்கொண்டனர். சங்கரும், சதீசும் தப்பிவிட்டனர். மேற்கண்ட விவரங்களை கைதான இருவரும் வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சங்கரையும், சதீசையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com