சோமரசம்பேட்டை பகுதியில் சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் மறியல்

சோமரசம்பேட்டை பகுதியில் சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோமரசம்பேட்டை பகுதியில் சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் மறியல்
Published on

சோமரசம்பேட்டை,

சோமரசம்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. இதில் அங்குள்ள மாரியம்மன் கோவில் தோப்பில் தென்னை மரங்கள் விழுந்து வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். நேற்றும் மின்வினியோகம் இல்லாத காரணத்தால் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முருகன், பீர்முகமது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சோமரசம்பேட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் சுந்தரம், உதவி பொறியாளர் ராபின்சன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், மின்கம்பம் பற்றாக்குறையால் உடனடியாக மின்வினியோகம் செய்ய முடியவில்லை என்றும், விரைவில் மின் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறிது நேரத்துக்கு பின்னர் சோமரசம்பேட்டை பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது.

டீசல் என்ஜின் மூலம் குடிநீர் வினியோகம்

இதேபோல, சோமரசம்பேட்டை அருகே உள்ள முள்ளிக்கரும்பூர் ஊராட்சி மஞ்சாங்கோப்பு பகுதியில் சூறைக்காற்று காரணமாக மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி செயலாளர் அறிவழகன் தண்ணீர் தொட்டிக்கு உரிய ஆழ்துளை கிணற்றில் டீசல் என்ஜின் பொருத்தி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு சரிசெய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com