சின்னவிளை கடற்கரையில் பேரிடர் மீட்பு ஒத்திகை தீயணைப்பு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தத்ரூபமாக நடத்தினர்

சின்னவிளை கடற்கரையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது. இதை தீயணைப்பு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தத்ரூபமாக நடத்தினர்.
சின்னவிளை கடற்கரையில் பேரிடர் மீட்பு ஒத்திகை தீயணைப்பு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தத்ரூபமாக நடத்தினர்
Published on

மணவாளக்குறிச்சி,

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். சுனாமி ஏற்படுத்திய பேரழிவுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் இதுபோன்ற பேரழிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது அதில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கடற்கரை கிராமங்களில் பேரிடர் மேலாண்மை குழுவினர் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் 14 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்த அரசு உத்தரவிட்டது.

குமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை கடற்கரை கிராமத்தில் நேற்று காலை பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

தீயணைப்புத்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மின்வாரியம், வருவாய்துறை, மருத்துவத்துறை, சுகாதார துறையினர் உள்பட அனைத்து துறையினரும் நேற்றைய ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயற்கை சீற்றத்தில் இருந்து மீண்டு வருவது, வெள்ளத்தில் சிக்கினால் நீரில் மூழ்காமல் வெளி வருவது, உயிருக்கு போராடுபவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுதல், இதற்கு தன்னார்வலர்களை பயன்படுத்தி கொள்வது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரிடர் காலங்களில் முறிந்து விழும் மின்கம்பங்கள் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது மின் இணைப்புகளை துண்டிப்பது எப்படி? முறிந்து கிடக்கும் மின்கம்பங்களை பற்றி யார் யாருக்கு தகவல் கொடுப்பது. மின்கம்பங்களை தொடாமல் தாண்டி செல்லும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலில் மூழ்குவோரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுதல், உயரமான கட்டிடத்தில் இருந்து பொதுமக்களை கீழே கொண்டு வருதல் போன்றவற்றை பேரிடர் மீட்பு குழுவினர் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

காயமடைந்தவர்களை மின்னல் வேகத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுவது பற்றியும், பேரிடர்களை பயன்படுத்தி சமூக விரோதிகள் வங்கிகளை கொள்ளை அடிப்பதை தடுப்பது போலவும், மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு அதை அணைப்பது போலவும் ஒத்திகை நிகழ்ச்சியில் நடித்து காட்டப்பட்டது. பேரிடர் காலங்களில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வதந்திகளை யாரும் பரப்ப கூடாது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சின்னவிளை, கடற்கரையில் நடந்த பேரிடர் மீட்பு நிகழ்ச்சிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து காணொலி காட்சி மூலம் கண்காணித்தபடி இருந்தார். அங்கிருந்தபடியே அவர் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கல்குளம் தாசில்தார் ராஜா சிங், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை, குளச்சல் நிலைய அலுவலர் தேவராஜ், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி, மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப், சின்னவிளை பங்கு தந்தை ஆன்டனி, திங்கள்நகர் போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள், மணவாளக்குறிச்சி, ரீத்தாபுரம், கல்லுக்கூட்டம், வெள்ளிமலை, மண்டைக்காடு போன்ற பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியின் போது சின்னவிளை கடற்கரை கிராமத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com