கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட்டுகள் திறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்பு

கோவை உக்கடத்தில் நேற்று மீன் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டன. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்பு.
கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட்டுகள் திறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்பு
Published on

கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கடுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. காய்கறிகள், மளிகை கடைகள் மட்டும் திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டது. உக்கடத்தில் உள்ள மீன்மார்க்கெட்டுகள் ஆரம்பத்தில் திறந்து இருந்தன. ஆனால் அதிக அளவிலான பொதுமக்கள் மீன் வாங்க குவிந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி மீன் மார்க்கெட்டுகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் அசைவ பிரியர்கள் மீன் வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி சிறு, குறு தொழில்கள் குறைந்த வேலையாட்களை பயன்படுத்தி தங்கள் தொழில் களை தொடர அனுமதி அளித்துள்ளது.

மீன் மார்க்கெட்டுகள் திறப்பு

அதன் ஒருபகுதியாக கோவை உக்கடம் லாரிபேட்டையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள சில்லரை மீன் மார்க்கெட்டுகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மீன் மார்க்கெட்டுகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் வியாபாரிகளும், அதைச்சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஏராளமான பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து மீன்களை வாங்கி சென்றனர்.

இது குறித்து மீன்மார்க்கெட் சங்கத்தின் பொருளாளர் சிராஜ் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த சில வாரங்களாக மீன் மார்க்கெட் திறக்கப்படவில்லை. தற்போது அரசு சிலவழி முறைகளை பின்பற்றி கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்மார்க்கெட்டுகளில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் தனிமனித இடைவெளியுடன் மீன் வாங்கிச்செல்ல அறிவுறுத்தி உள்ளோம். தற்போது தூத்துக்குடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இருந்து மட்டுமே மீன் வரத்து தொடங்கியுள்ளது. அதனால் சற்று மீன்விலை அதிகமாக உள்ளது. மீன்வரத்து அதிகமாகும் போது மீன் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com