பஞ்சப்பள்ளி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 குடிசைகள் அகற்றம்

பஞ்சப்பள்ளி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 குடிசைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
பஞ்சப்பள்ளி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 குடிசைகள் அகற்றம்
Published on

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பட்டாபி நகர் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கல்லாங்குத்து எனும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, காடு செட்டிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 66 பேர் குடிசைகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இந்த இடத்தை காலி செய்யுமாறு வருவாய்த்துறை சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், நோட்டீசு வழங்கியும் அவர்கள் காலி செய்யவில்லை.

இந்தநிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைகளை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் பாலக்கோடு தாசில்தார் ராஜா மற்றும் வருவாய் துறையினர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 66 குடிசைகளையும் இடித்து அகற்றினர்.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடிசை அமைத்தவர்கள் திரண்டு வந்து வருவாய்த்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தாசில்தார் கூறுகையில், கல்லாங்குத்து புறம்போக்கு என்பது பாதுகாக்கப்பட்ட இடமாகும். இந்த பகுதியில் பட்டா வழங்க சட்டப்படி அனுமதி இல்லை. வீடு இல்லாதவர்கள் முறைப்படி பட்டா வேண்டி மனு செய்தால் வேறு இடத்தில் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் மீண்டும் அத்துமீறி குடிசை அமைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com