

திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு ரதவீதி, அபிராமிஅம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தன்ராஜ், வெங்கடேசன், சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று அங்கு சென்றனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிரடியாக ஈடுபட்டனர். அப்போது பல கடைகளின் முன்பு சாலையோரம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரை, சிமெண்டு சுவர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை பார்த்த சில கடைக்காரர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமித்து இருந்த மேற்கூரைகளை அகற்றினர். அதோடு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரர்களை, அதிகாரிகள் எச்சரித்தனர்.