காதல் பிரச்சினையில் தகராறு: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது; 6 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக மீட்டனர்

சென்னையில் காதல் தகராறில் 2 சிறுமிகளை ரெயிலில் ஏமாற்றி கடத்தி சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, 2 சிறுமிகளையும் மீட்டனர்.
காதல் பிரச்சினையில் தகராறு: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது; 6 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக மீட்டனர்
Published on

2 சிறுமிகள் மாயம்

சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்ற 13 வயது சிறுமியும், அவளது 8 வயது உறவுக்கார சிறுமியும் காணாமல் போனதாக பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து காணாமல் போன 2 சிறுமிகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் சேஷாங்சாய் ஆகியோர் மேற்பார்வையில் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் அஜூகுமார் ஆகியோர் தலைமையில் தனி போலீஸ் படையினர் களத்தில் இறங்கினார்கள். மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீசாரும், காணாமல் போன சிறுமிகளின் செல்போன் நம்பர் மூலம் அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கேமரா மூலம் துப்பு துலங்கியது

கோட்டூர்புரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், காணாமல் போன சிறுமிகள் இருவரும் ஒரு வாலிபருடன் கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயிலில் ஏறும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியை ரெயில்வே போலீஸ் வாட்ஸ்அப்-குழுவில் அனுப்பி, குறிப்பிட்ட சிறுமிகளை மீட்கும்படி கோட்டூர்புரம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில், 2 சிறுமிகளும், குறிப்பிட்ட வாலிபருடன் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார்கள். அப்போது சந்தேகத்தின் பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ்குமார் என்பவரும் அந்த ரெயிலில் ஏறி அவர்களுடன் சென்றார்.

விழுப்புரத்தில் மீட்பு

ஏ.சி. பெட்டியில் பயணித்த, 8 வயது சிறுமி திடீரென்று அழ ஆரம்பித்தாள். நான் வரமாட்டேன், என்னை வீட்டில் விட்டு விடுங்கள் என்று அந்த சிறுமி கேட்க ஆரம்பித்தாள். இதனால் சரோஜ்குமார், குறிப்பிட்ட சிறுமிகளையும், அவர்களுடன் சென்ற வாலிபரையும் விசாரித்தார். அப்போது வாலிபர், 2 சிறுமிகளும் தனது உறவுக்காரர்கள் என்று தெரிவித்தார். ஆனால் 8 வயது சிறுமி அவர் சொல்வது பொய் அவரை எனக்கு தெரியாது, என்று அழுகையை அதிகப்படுத்தினாள்.

அதன்பிறகுதான் வாட்ஸ்அப் குழுவில் வந்த வாலிபரும், 2 சிறுமிகளும் இவர்கள்தான் என்பதை சரோஜ்குமார் உறுதிபடுத்தினார். இதையடுத்து 3 பேரையும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இறக்கினர்.

சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் 2 சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

காதல் பிரச்சினையில் கடத்தல்

இதையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்தனர். இதில், சிறுமிகளுடன் பிடிபட்ட வாலிபர், சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியை காதலித்தார். ஆனால் மாணவி அவரது காதலை ஏற்கவில்லை. மாணவியை தனது காதல் வலையில் விழவைக்க, அவரது தோழியான 13 வயது சிறுமியுடன் வாலிபர் பழக்கமானார்.

பின்னர் தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 13 வயது சிறுமியை ஏமாற்றி கடத்திச்சென்று அங்கிருந்து பிளஸ்-2 மாணவியிடம் பேசி, நீ என்னை காதலிப்பதாக சொன்னால்தான், உனது தோழியை விடுவிப்பேன், என்று மிரட்டலாம் என்று அவர் திட்டமிட்டு கடத்தல் திட்டத்தை அரங்கேற்றினார். ஆனால் 13 வயது சிறுமியுடன் வந்த 8 வயது சிறுமியால் மாணவர் மாட்டிக்கொண்டது தெரியவந்தது.

அந்த மாணவர் தனது பெயரை ரமேஷ் என்றும் ராஜேஷ் என்றும் மாற்றி, மாற்றி பேசி வருவதாகவும், அவரது தந்தை பெரிய அரசியல் புள்ளி என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com