மாவட்ட அளவில் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது

புதுக்கோட்டை மாவட்ட அளவில் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடைபெற உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
மாவட்ட அளவில் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-20-ம் ஆண்டுக்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் ஆண்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் 100, 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளது.

இதேபோல பெண்களுக்கான தடகள போட்டிகள் 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேசைப்பந்து, கைப்பந்து போன்ற போட்டிகளும் நடைபெற உள்ளது.

வயது வரம்பு கிடையாது

இப்போட்டிகளில் கலந்து கொள்ள அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். காவல்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மட்டும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். அரசு பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். சீருடை பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. அரசு சார்பு, தன்னாட்சி நிறுவன பணியாளர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது.

தற்செயல், தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், தொழில்முறை பணியாளர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. புதிதாக பணியில் சேர்ந்து 6 மாத பணிக்காலம் முடிக்காத நிரந்தர பணியாளர்கள் போட்டிகளில் பங்கேற்க இயலாது. போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. மாவட்ட மற்றும் மாநில அளவிலான அரசு பணியாளர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு, பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவைகள் சம்பந்தப்பட்ட துறை மூலம் வழங்கப்பட வேண்டும்.

பெயர் பதிவு செய்ய வேண்டும்

குழு விளையாட்டு போட்டிகளில் ஒருவர் ஒரு குழு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள இயலும். தடகள விளையாட்டில் ஒருவர் தொடர் ஓட்டம் தவிர, ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான போட்டிகளில் குழு விளையாட்டில் தேர்வு செய்யும் சிறந்த அணி, தடகள விளையாட்டில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அரசு பணியாளர்கள், தாங்கள் பணிபுரியும் துறை தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட, பணிபுரிவதற்குரிய சான்றுடன் நாளை காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வந்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com