தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் எம்.எல்.ஏ. உள்பட 250 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சேலத்தில் தி.மு.க.கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ. உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் எம்.எல்.ஏ. உள்பட 250 பேர் கைது
Published on

சேலம்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தி.மு.க.கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.

முன்னதாக மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் இடம் வரை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது, அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன், தி.மு.க.நிர்வாகிகள் ஜெயக்குமார், கலையமுதன், சுபாஷ், தாமரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய பஸ்நிலையம் பகுதியில் ஒருபுறம் சாலை மறியல் நடந்து கொண்டிருந்த வேளையில், மறுபுறம் அங்கு வரிசையாக ஓட்டல்கள் திறக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த சிலர் ஆவேசம் அடைந்து, அங்குள்ள கடைகளை அடித்து சேதப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து அந்த கடைகள் முழுவதும் உடனடியாக மூடப்பட்டன. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர், புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு தனியார் பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர, பிரதமர் மோடி சொல்வதை தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்பதாகவும், அதை சித்தரிக்கும் வகையில் சிலர் அவர்களது மூன்று பேரின் முகமூடிகளை அணிந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றதையும் காணமுடிந்தது.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 15 பெண்கள் அடங்குவர். பின்னர், அவர்கள் பஸ் மற்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தால் புதிய பஸ்நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com