

தஞ்சாவூர்,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மாவட்ட தி.மு.க. சார்பில் கருத்துகேட்பு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.
கூட்டததில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்களான, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தனர்.
கோரிக்கை மனு
இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், மத்திய மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான துரை.சந்திரசேகரன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதிபாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர் கூட்டணியினர், கைவினைதொழிலாளர்கள், நெசவுத்தொழிலாளர்கள், மருத்துவர்கள் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டனர். பின்னர், அவர்களது கோரிக்கைகளை, அங்கு வைத்திருந்த பெட்டியில் போட்டனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பழனிமாணிக்கம், தி.மு.க. வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன், நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ்கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய மாவட்டம்
இதில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். புகைப்பட கலைஞர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.