தர்மபுரி உழவர் சந்தையில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்

தர்மபுரி உழவர் சந்தையில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய மு.க.ஸ்டாலின் அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
தர்மபுரி உழவர் சந்தையில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்
Published on

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி மற்றும் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் வி.கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தர்மபுரி அதியமான் அரண்மனை ஓட்டலில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி உழவர் சந்தைக்கு சென்றார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடமும், காய்கறி விற்பனை செய்பவர்களிடமும் கலந்துரையாடினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு சென்ற அவர் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் காபி குடித்தார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பிய மு.க.ஸ்டாலினிடம் சிறுவர், சிறுமிகள், இளைஞர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திடீரென உழவர் சந்தைக்கு மு.க.ஸ்டாலின் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் பென்னாகரம் ரோட்டில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சின்னசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் பிரசார பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வேன் மூலம் அரூருக்கு புறப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com