தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்
Published on

தேனி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேனி மாவட்டத்தில் பல இடங்களில் நடந்தது. தி.மு.க.வினர் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி இருந்தனர். தேனி நகர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், பத்திரிகையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பிலும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் நேற்று மாலை மவுன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் பெரியகுளம் சாலை வழியாக நேரு சிலை சிக்னல் வரை நடந்தது. இதில் தி.மு.க. நகர பொறுப்பாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் போடியில் தேவர் சிலையில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் வள்ளுவர் சிலை, பெரியாண்டவர் சாலை, வ.உ.சி. சிலை வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் கொட்டுமழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பஸ் நிறுத்தத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பி.துரைராஜ் கருணாநிதி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ஜெயப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வடுகப்பட்டி கே.பி.ராஜம்மாள் அறக்கட்டளை சார்பில் வெள்ளைப்பூண்டு பஜாரில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் வெள்ளைப்பூண்டு வியாபாரிகள் சங்க தலைவர் குணசேகரன், அறக்கட்டளை அறங்காவலர்கள் வினோத், பொறியாளர் ராம்பாண்டி, பிரவீன், முருகன் உள்பட பலர் பலந்து கொண்டனர். இதேபோல் கம்பம், உத்தமபாளையம், போடி, கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் மவுன ஊர்வலம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com