தி.மு.க. தலைமையிலானது கொள்கை கூட்டணி - கோவையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

தி.மு.க. தலைமையிலானது கொள்கை கூட்டணி என்று கோவையில் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தி.மு.க. தலைமையிலானது கொள்கை கூட்டணி - கோவையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
Published on

கோவை,

கோவையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி எழுச்சி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்கள் கோவை வந்தனர். அதன்படி கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வீரரை மீட்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது. ஐ.நா. மன்றம் வரை சென்று பிடிபட்டவர்களை மீட்க முடியும். இந்திய விமானப்படை செய்தது சாகசம். இதை வரவேற்கிறேன். அதே வேளையில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் அது சிறந்தது. பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணி இருக்கிறது. புதிதாக வரக்கூடிய கட்சிகளை தி.மு.க. முடிவு செய்யும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி. எதிர் அணியினர் அமைத்து இருப்பதுபோன்று சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. 7 தமிழர் விடுதலையை பொறுத்தவரை குற்றவாளிகளை குற்றவாளிகளாக பார்க்க வேண்டும். தவறு செய்தவர்களை தவறு செய்தவர்களாக பார்க்க வேண்டும். கொலை செய்தவர்களை தமிழர்கள் என்ற அடைமொழி கொடுப்பது சரியானது அல்ல. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வதா? இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தி பிரசாரத்திற்கு தமிழகத்திற்கு கண்டிப்பாக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புலவாமா தாக்குதலை அடுத்து இந்திய விமான படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே இரு நாடுகளுக்கிடையேயான போராக இது மாறக்கூடாது. அதற்கேற்றவாறு பதற்றத்தை தவிர்க்க, போர் சூழலை தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. உரிய நேரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி 4 ஆண்டாக இணைந்து மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வருகிறது. எனவே எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு பாராட்டுகள். தேச பாதுகாப்பு என்கிற நிலையில் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை பாதுகாப்போம். இந்த தாக்குதல் மூலம் பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. தேச பாதுகாப்பில் அக்கறை இருந்தால் முன்பே தீவிரவாத தாக்குதலை தடுத்து இருக்க வேண்டும்.

காஷ்மீர் தாக்குதல் மற்றும் வடமாநில பிரச்சினைகளை மூடி மறைக்க இந்த தாக்குதலை பயன்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. தேர்தல் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் பா.ஜனதா செய்யும். எனவே நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com