ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை தடுக்க முடியாது என்று வைகோ கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது
Published on

நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன்திரு மலைக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் வைகோ நிருபர் களிடம் கூறியதாவது:-

மதசார்பின்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் எடுத்துக்காட்டாக அம்பேத்கர் திகழ்ந்தார். ஆனால் தற்போது ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு, மதசார்பின்மைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. இந்திய இறையாண்மையை குழிதோண்டி புதைத்து வருகிறது.

தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக அரசும் துணைபோகிறது. மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்பின் கொள்கைகளை செயல்படுத்துவதில் குறியாக இருக்கிறது.

கன்னியாகுமரியில் ஒகி புயல் தாக்கியதில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து நிற்கிறார்கள். காணாமல் போன மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மக்கள் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை. முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதுவரை 2,100 மீனவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அரசு சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பேரிடருக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அந்த நிதியை மாநில அரசு கேட்டு பெற வேண்டும்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரையில் ஏற்கனவே ரூ.89 கோடி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது நூதன முறையில் அ.தி.மு.க.வினர் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சயம் வெற்றி பெறுவார். அவரது வெற்றியை தடுக்க முடியாது. காரணம் என்னவென்றால், அ.தி.மு.க. அரசின் மீது மக் களுக்கு வெறுப்பு இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடை பெறாமல் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிக்காக ம.தி.மு.க. பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com