தூத்துக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் கொலையில் 5 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் கொலையில் 5 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 64). இவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் கருணாகரன் குலையன்கரிசலில் இருந்து திரவியபுரம் செல்லும் ரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு தனியாக காரில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல், கருணாகரனை வழிமறித்து காரில் இருந்து கீழே இறக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குலையன்கரிசல் வேதகோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ் என்பவர் தூத்துக்குடி ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவரை கட்சி தலைமை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கியது. இதற்கு கருணாகரன் தான் காரணம் என சுரேஷ் நினைத்து வந்தார்.

மேலும் சுரேஷ் புதுக்கோட்டை பகுதியில் நிலத்தடி நீர் விற்பனை செய்து வந்தார். இது தொடர்பாக கருணாகரன் குடும்பத்தினருக்கும், சுரேசுக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. அதே நேரத்தில் கருணாகரனின் உறவினர் பாலமுருகனை புதுக்கோட்டையில் வைத்து சுரேஷ் தூண்டுதலின் பேரில் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை போலீசில் நிலுவையில் உள்ளது.

இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் அதிகரித்து வந்தது. இதனால் சுரேஷ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான ரமேஷ், இளையராஜா, பாண்டி, ராஜலிங்கம், சண்முகஜோதி வேல் மற்றும் சிலர் கருணாகரனை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் பாண்டி, இளையராஜா, சண்முகஜோதிவேல், ரமேஷ், சேவாக் ஆகிய 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com